வாய் துர்நாற்றம், மிக மோசமான நிகழ்வு.



வாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு. ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும். அதே நேரம், முகம் சுளித்தாலோ, பேசாமல் தவிர்த்தாலோ, அவர்கள் காயப்பட்டுவிடுவார்கள்.


சமீபத்தில் வாய் துர்நாற்றத்தால் விவாகரத்து வரைக்கும் சென்ற தம்பதியருக்கு, விவாகரத்துக்குப் பதிலாக ஒரு டாக்டர் தீர்வு அளித்தார். சின்னத் தீர்வுதான். ஆனால், அவர்களின் வாழ்க்கையையே புதுப்பித்தது. `உங்கள் மீது வியர்வை நாற்றம் அடிக்கிறது, வாய் துர்நாற்றம் வீசுகிறது’ என்று நாம் வெளிப்படையாக இன்னொருவரிடம் சொல்ல முடிவது இல்லை. இதை சொல்லாததன் மூலம் நாம் அவருக்கு கெடுதலைத்தான் செய்கிறோம். அதை அவரிடம் சொல்லி, தகுந்த மருத்துவரைப் பார்க்க ஆலோசனை வழங்குவதன் மூலம், அந்தப் பிரச்னை சில நாட்களிலேயே தீர்ந்துபோகும்.


வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது?

ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
இருப்பினும், வாய் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னையால்தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. 
சொத்தைப் பல், 
காரைப் பற்கள், 
கடைவாய்ப் பற்கள் பாதி முளைத்து இருப்பது,
 ஈறு நோய்கள், 
டான்சில்ஸ்,
 சைனஸ் போன்றவை இருந்தாலும் துர்நாற்றம் வரலாம். 
நுரையீரல் தொற்று, 
அதிகப்படியான சளி, 
வாய், வயிற்றுப்புண்,
 அஜீரணம், 
கல்லீரலில் பிரச்னை,
 வாயுத் தொல்லை, 
சில மாத்திரைகளை உட்கொள்வதால் வாய் வறட்சியாவது, 
மூக்கடைப்பால் வாய் திறந்து தூங்கும்போது உமிழ்நீர் சுரப்பிகளில் பிரச்னை, குறைவாக உமிழ்நீர் சுரத்தல்,
 தூக்கத்தில் வாய் திறந்து தூங்கும் பழக்கம் போன்ற காரணங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உணவுகளும் துர்நாற்றமும்

தினமும் இரண்டு முறை பிரஷ் செய்பவர்களாக இருந்தாலும் துர்நாற்றம் இருக்கலாம். எதனால் பிரச்னை என மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவர்கள், உணவில் அதிக அளவில், வெங்காயம், பூண்டு சேர்ப்பதால்கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பது, அடிக்கடி காபி குடிப்பது, சீஸ், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கலாம். 
வாயுத் தொல்லைக்காக கோலா பானங்களை அடிக்கடி அருந்துவோருக்கு துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 
அதுபோல், மதுப் பழக்கம், புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதும் அவசியம்.



துர்நாற்றம் தடுக்க சில வழிகள்…
காலை  மற்றும் இரவில் கட்டாயம் பல் துலக்க வேண்டும். 
பற்களைச் சரியாகத் தேய்க்காமல் இருந்தால், வெள்ளைப் படிமம் போன்ற மாவு படியும். இது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
கொஞ்சமாகக் காரை படியும்போதே பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சொத்தைப் பல்லில் உணவுத் துகள் தங்கி துர்நாற்றம் ஏற்படலாம். எனவே, இவற்றை மருத்துவர் உதவியோடு சரிசெய்ய வேண்டும்.
ஞானப்பல் முளைக்கும் சமயத்தில் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும், வாய் கொப்பளிக்க வேண்டும். அது, நொறுக்குத்தீனியாக இருந்தாலும் சரி.
வாய் உலராமல், இருக்க நீர் அருந்த வேண்டும். நீர்சத்து நிறைந்த காய்கனிகளைச் சாப்பிடலாம்.
நீர் சரியாக அருந்தாவிட்டால், உமிழ்நீரின் அடர்த்தி குறைந்து வாய் துர்நாற்றம் ஏற்படும்.
பசியால், வாயுத் தொல்லை வரும். அதனால், வாயில் துர்நாற்றம் வீசும். ஆகவே, நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.
காலை எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்யலாம். நல்லெண்ணெயை வாயில் வைத்து, வழவழப்பு நீங்கும் வரை வாய் கொப்பளித்த பின் பல் துலக்கலாம்.



சிகிச்சைகள் என்னென்ன?
துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு மனம் தளர்ந்துவிடாமல் ஒருமுறை மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
எதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்.
சில மாத்திரைகளை எடுப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது எனில், அதற்குத் தகுந்ததுபோல சிகிச்சைகள் உண்டு.
‘வயிறு தொடர்பான பிரச்னை’ எனப் பல் மருத்துவர் பரிந்துரைத்தால், வயிறு இரைப்பை மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்.
வாய் துர்நாற்றம் தவிர்க்க தற்காலிக டிப்ஸ்…
பிரத்யேக ஸ்ப்ரேக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இது, நிரந்தரத் தீர்வு கிடையாது.
சுகர் ஃப்ரீ, சர்க்கரை இல்லாத சூயிங்கம்மைச் சுவைக்கலாம்.
வெளியில் செல்லும் முன், நீர் அருந்திவிட்டு, கைகளில் நீர் வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்கலாம்.

கைகளில் ஏலக்காயை வைத்துக்கொண்டால், திடீரென ஒரு மீட்டிங் அல்லது நிகழ்வுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருப்பின், ஒரு ஏலக்காயை மென்று தற்காலிகமாகச் சூழலைச் சமாளித்துக்கொள்ளலாம்.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.