டோரன்ட் டவுன்லோடுகள் - இதில் இவ்வளவு வில்லங்கமா?
நாம் நேர்மையானவர் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், நம்மை அறியாமல் நாம் செய்யும் சின்னசின்ன தவறுகள் கூட கிரிமினல் குற்றங்களாக இருக்கின்றன.
இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கும்போது இணைய வேகம் குறைவாக இருந்தாலும் ‘அன்லிமிடெட்’ பிளான்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு எப்போதும் குஷிதான். குறைவான கட்டணம், நிறைவான டவுன்லோடுகள் என முதலில் டோரன்ட் மென்பொருளைத்தான் இன்ஸ்டால் செய்வார்கள். முதல் வேலையாக நான்கு படங்கள், மூன்று மியூஸிக் ஆல்பம், ஒரு 10 ஜிபி கேம் என டவுன்லோடை போட்டு தெறிக்கவிடுவார்கள். ஆனால், இவர்களில் பலருக்கும் இருக்கும் குழப்பம், டோரன்ட் மூலம் டவுன்லோடு செய்வது குற்றமா?..இல்லையா? என்பது..!
ஒன்று தெரியுமா? டோரன்ட்டில் டவுன்லோடு செய்வது டெக்னிக்கலாக குற்றம் கிடையாது!
அட ஆமாம் பாஸ்..டோரன்ட் பயன்படுத்துவது தப்பில்லை. ஆனால், அதில் எதை டவுன்லோடு செய்கிறீர்கள் என்பதுதான் சிக்கல்.
ஓ.கே..முதலில் டோரன்ட் உலகம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்!
உதாரணத்துக்கு, ஒரு PDF ஃபைலை டோரன்ட் நெட்வொர்க் மூலமாக பகிர, முதலில் டோரன்ட் மென்பொருளை இன்ஸ்டால் செய்யவேண்டும். பகிர விரும்பும் ஃபைலை மென்பொருளில் தேர்வு செய்ததும், அது ‘torrent’ எனும் எக்ஸ்டென்ஷனுடன் இன்னொரு ஃபைலை தரும். இந்த ஃபைலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களால் டோரன்ட் மென்பொருள் மூலம் உங்களுடைய PDF ஃபைலை பதிவிறக்கம் செய்ய முடியும்.
நீங்கள் Torrent ஃபைலை இன்னொரு நண்பருக்கு மட்டும் கொடுத்தால், அவர் மட்டும்தான் டவுன்லோடு செய்யமுடியும். ஆனால், உங்களுடைய PDF ஃபைலை இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்ள நினைத்து, பொது இணையத்தில் Torrent ஃபைலை வெளியிட்டால் என்ன ஆகும்? பல லட்சம் பேர் உங்களுடைய PDF ஃபைலை டவுன்லோடு செய்ய முடியும்.
உங்களுடைய PDF ஃபைலை பல லட்சம் பேரில் ஒரே ஒருவர் டவுன்லோடு செய்துவிட்டால் போதும். அதன்பிறகு, உங்களுடைய இணையம் நிறுத்தப்பட்டாலும், அவர் மூலம் உலகம் முழுக்க அந்த ஃபைல் பரவிக்கொண்டுதான் இருக்கும்.
அது எப்டி பாஸ்?
டோரன்ட் என்பது ஒரு பரவலாக்கப்பட்ட நெட்வொர்க். அதாவது Decentralized நெட்வொர்க். டைரக்ட் டவுன்லோடு என்றால், ஒரே ஒரு சர்வர் மட்டுமே உங்களுக்கான ஃபைலை அனுப்பும். ஆனால், டோரன்ட் நெட்வொர்க்கில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களில் இருந்து குட்டி குட்டியாக ஃபைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.
இந்த கான்செப்ட்டின்படி, உங்களுடைய PDF ஃபைலை ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களில் 800 பேர் தொடர்ந்து டோரன்ட் செய்தால், தானாகவே PDF ஃபைலை டவுன்லோடு செய்யும் மற்றவர்களுக்கு 800 பேரின் கம்ப்யூட்டரில் இருந்து ஃபைல் அப்லோடு ஆகும். எனவே, ஒருவரிடம் இருந்து சென்ற ஃபைல், ஆயிரம் பேரிடம் சென்று அங்கிருந்து கோடிக்கணக்கானோரை அடைகிறது. இதனால், இந்த PDF ஃபைல் ஏதேனும் ஒரு சர்வரில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. டோரன்ட் இருக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டருமே ஒரு மினி சர்வர்தான். ஏனென்றால், இந்த கம்ப்யூட்டர் டவுன்லோடு மட்டும் செய்வதில்லை. அப்லோடும்தான் செய்கிறது. ஆனால், அப்லோடை நிறுத்தி வைக்கமுடியும். எல்லோருமே அப்லோடை நிறுத்திவிட்டால், அந்த டோரன்ட் செயலிழந்துவிட்டதாகவே அர்த்தம்!
இங்குதான் Seeders/Leechers ratio எனும் மிக முக்கியமான கான்செப்ட் வருகிறது. ஒரு டோரன்ட் ஃபைலை உயிரோடு வைத்திருப்பது இதுதான்.
இதில், ஃபைலை மற்றவர்களுக்கு பகிர்பவர்கள், அதாவது அதிகம் அப்லோடு செய்பவர்களை Seeders எனும் அழைக்கிறார்கள். டவுன்லோடு செய்பவர்களை Leechers என்று அழைக்கிறார்கள். இப்போது ஒரு டோரன்ட்டுக்கு 1,000 பேர் Seeder-களாகவும், 1,000 பேர் Leecher-களாகவும் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்படியானால், அப்லோடுகளும், டவுன்லோடுகளும் சரிசமமாக இருக்கிறது. எனவே, இந்த 2,000 பேரின் இணைய வேகத்தைப் பொறுத்து அனைவருக்கும் ஃபைல் கச்சிதமாக பிரிந்து செல்லும்.
இப்போது 10,00,000 பேர் Leecher-களாக இருக்கிறார்கள் என்றால், 1,000 பேர், 10 லட்சம் பேருக்காக அப்லோடு செய்யவேண்டும் அல்லவா? எனவே, இந்த 10 லட்சம் பேரின் டோரன்ட் டவுன்லோடு வேகம் குறையும். இப்போது இந்த 10 லட்சம் பேரும் PDF ஃபைலை டவுன்லோடு செய்துவிட்டு, அப்லோடு செய்கிறார்க்ள் என்று வைத்துக்கொள்ளலாம். இங்கேதான் ‘மேஜிக்’.
இப்போது 10 லட்சம் பேர் Seeder-களாக இருக்கிறார்கள். ஆனால், PDF ஃபைலை வேண்டுபவர்களின் எண்ணிக்கை வெறும் 500-ஆக குறைகிறது. அப்படியானால் 500 Leecher-கள்தான். எனவே 10 லட்சம் பேர், 500 பேர் கேட்கும் PDF ஃபைலை கொடுக்கப்போகிறார்கள் அல்லவா? எனவே, இந்த 500 பேருக்கு அதிக டவுன்லோடு வேகத்துடன், விரைவாக ஃபைல் கிடைக்கும்.
ஒருவேளை, இந்த Seeder-களின் எண்ணிக்கை ‘0’-வாக குறைந்தால், அன்றுடன் அந்த டோரன்ட்டை இணையத்தில் மரணித்ததாக கருதிக்கொள்ளலாம். ஆனால், யாரோ ஒருவர் மட்டும்கூட அந்த ஃபைலை தொடர்ந்து பகிர்ந்தால், அந்த டோரன்ட் உயிருடன் இருக்கிறது என்றே அர்த்தம்.
எல்லாம் சரி.. வில்லங்கம் என்று தலைப்பு வச்சீங்களே…!
ரைட்டு. நீங்கள் பகிர்ந்த PDF ஃபைல், நீங்களே டைப் செய்த டாக்குமென்ட் என்று வைத்துக்கொள்வோம். இதை உலகுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி நீங்கள் டோரன்ட் செய்தால் தப்பே இல்லை.
ஆனால், நீங்கள் டோரன்ட் செய்தது நேற்று ரிலீஸான ‘கபாலி’ படம் என்றால்... தவறு தானே! டெக்னிக்கலாக காப்புரிமை பெற்ற, இன்னொருவர் விற்பனை செய்யும் தயாரிப்பை நீங்கள் உலகுக்கு இலவசமாக பகிர்ந்திருக்கிறீர்கள் அல்லவா? இதற்கும் திருட்டு விசிடிக்கும் வித்தியாசம் இல்லை பார்த்தீர்களா? ஷாக்கிங்காக இருக்கிறதா? ஆம், காப்புரிமை பெற்ற ஃபைல்களை டோரன்ட் செய்வது திருட்டு விசிடி போன்று குற்றம்தான். ஆனால், இங்கு பல லட்சம் பேர் ஒரே படத்தையோ, பாடலையோ பகிர்கிறார்கள் என்பதால், அத்தனை பேரையும் பிடித்து கூண்டில் நிறுத்த முடியாது. முதலில் அப்லோடு செய்பவர்களையே வேட்டையாடுவார்கள். ஆயிரக்கணக்கானோரை கூண்டில் நிறுத்திய சம்பவங்கள் வெளிநாட்டில் நடந்திருக்கின்றன.
ஆனால், திருட்டு விசிடி குற்றம் என்று பரவலாக இருக்கும் விழிப்புணர்வு, தவறான டோரன்ட் பதிவிறக்கங்களுக்கு இல்லை. இதனால், டோரன்ட் பயன்படுத்தி புதிய படங்களை, பாடல்களை, மென்பொருள்களை டவுன்லோடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்வது தவறு என்று தெரியாமலேயேதான் செய்கிறார்கள்.
மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு இருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு, முதலில் படத்தயாரிப்பாளர்களுக்கும், மியூஸிக் நிறுவனங்களுக்கும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்பொதெல்லாம் ரொம்பவே முன்னேறிவிட்டார்கள் என்பதால், விரைவில் தமிழ் டோரன்ட் தளங்களுக்கு கெடுபிடி வரலாம். தமிழ் ராக்கர்ஸ் தளம் ‘ப்ரேமம்’ படத்தை பகிர்ந்து சிக்கியது நினைவிருக்கலாம். ‘ரஜினி முருகன்’ படத்துக்காக டோரன்ட்டுகளை எதிர்த்ததிருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தால், பிரபல டோரன்ட் டிராக்கரான ‘TrackerFix’ சேவையே முடங்கியது. ‘மேக்னட் லிங்க்’ போன்று டோரன்ட் சேவைகள் டெக்னிக்கலாக அப்டேட் ஆனாலும், உலகெங்கும் தயாரிப்பு நிறுவனங்களும் டெக்னிக்கலாக அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன.
டோரன்ட் உலகின் கதாநாயகனான பைரேட் பே தளமே இன்று முடக்கப்பட்டு, ப்ராக்ஸிகள் மூலமாகவே இயங்கி வருகிறது.
எனவே, காப்புரிமை பெற்ற எதையும், படமாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, நீங்கள் டோரன்ட்டில் உலகுடன் பகிர்ந்தால் டெக்னிக்கலாக கிரிமினல்தான்.
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.