ஆற அமர...(நிமிடக் கதை )
அன்புடன் ஒரு நிமிடம் - 99
ஒரு ஞாயிறு மாலை. கிஷோர் வீட்டில் நுழைந்த ராகவ் முதலில் கவனித்தது அதைத்தான்.
மிகமிக உற்சாகமாக இருந்தான் அவன். பாடிக்கொண்டே லேப்டாப்பில் டைப் அடித்தான் ஆடிக்கொண்டே நடந்தான்.
“யாழினி?”
“கோவிலுக்கு.”
”என்ன உற்சாகம் பொங்கி வழியுது?”
”பொங்காதா பின்னே? கழிஞ்ச நாலு ஞாயித்துகிழமையும் ஏதாவது ஒரு இஷ்யூ வந்து எங்களுக்குள்ளே ஒரே சண்டை.”
”ஓஹோ?”
”போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு புறப்பட்டோம். அவ ஃப்ரண்ட் தங்கைக்கு. நான் புறப்பட கொஞ்சம் லேட். உடனே அவள் சினேகிதிகள் விஷயத்தில் எப்பவும் நான் அவளை மதிக்காமல் இருக்கிறேன்னு ஒரு பிடி பிடிச்சாளே பார்க்கணும். அன்னிக்கு முழுதும் அப்புறம் சண்டைதான் நடந்தது. முந்தின வாரம் என் மானேஜர் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பரிசளிக்க ஒரு வெள்ளி சிமிழ் வாங்கிட்டு வந்தேன், அதைப் பார்த்திட்டு நான் எப்பவும் ஊதாரித்தனமான செலவு செய்யறதைப் பத்தி அவள் அடுக்க, அவளோட வீண் செலவுகளை நான் சொல்ல, மணிக்கணக்கா விவாதம் ஒரு பட்டி மன்ற ரேஞ்சுக்கு... அதுக்கு முந்தின வாரம் டிராயிங் வகுப்பில் சேர்த்து விடச் சொன்னாள். உனக்கு இப்ப இருக்கிற நேர நெருக்கடியில் இது தேவையா இப்பன்னேன். அவ்வளவுதான். அவள் சொல்லுகிற எந்த விஷயத்தையுமே நான் பெரிசா எடுத்துக்கிறதில்லைங்கிறதைப் பத்தி பெருசா ஒரு ஆர்க்யுமெண்ட் அன்னிக்கு பூரா. அதுக்கு முந்தின வாரம் இன்னொரு பிரசினை.. அதில பயங்கர சண்டை...”
”ஒஹோ?”
”ஆக இந்த வாரம்தான் எந்த இஷ்யூவும்இல்லே. அதனால சண்டை வர சான்ஸ் இல்லாம போச்சு. அதைக் கொண்டாடறேன் அதான் இந்த ஜாலி. நானும் சரி அவளும் சரி ஜாலியான மற்ற விஷயங்களைப் பத்தி பேசிட்டு இன்னிக்கு பொழுதை இண்ட்ரஸ்டிங்கா கழிக்கறோம்.
இதைவிட உபயோகமா இன்றைய பொழுதைக் கழிக்க முடியுமா சொல்லுங்க, பார்க்கலாம்.”
”முடியும்,” என்றார் அழுத்தமாக.
தொடர்ந்தார். ”போன வாரங்களிலும் சரி இந்த வாரமும் சரி எதை செய்யக் கூடாதோ அதையே நீங்க செய்யறீங்க.”
அவரை விசித்திரமாகப் பார்த்தான்
”எப்பவுமே ஒரு பிரசினையில ரெண்டுபேரும் ஈடுபடும்போது அதைப்பற்றிய இருவர் அபிப்பிராயங்களையும் அழுத்தியோ ஒருத்தர் மற்றவரைக் குற்றம் சொல்லியோ கோதாவில இறங்ககூடாது. அந்த சமயத்தில் நம் உணர்வுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. அந்த சமயத்தில் ஒருத்தரை ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போவதும் விட்டுக் கொடுப்பதும்தான் முக்கியம். அதுக்குத்தான் முயலணும்.”
”அது சரிதான், ஆனா இன்னிக்கு என்ன?”
”இன்னிக்கு, அதாவது எந்த பிரசினையும் கிளம்பாத இந்த மாதிரி நாளில்தான் நீங்க ரெண்டு பேரும் ஆர அமர உட்கார்ந்து நீங்க ஒருத்தரைப் பத்தி மற்றவர் சொல்லும் அந்த மனக் குறைகளை எடுத்து நிதானமாக அலசிப் பார்க்கவேண்டும். ஏன்னா இப்ப உணர்ச்சி வசப்பட சான்ஸ் கொஞ்சமும் இல்லை. அவங்கவங்க தரப்பை எடுத்து சொல்லி அமைதியாக பேசலாம், வாதாடலாம். பொறுமையா இருவரும் கேட்டு முடிவுகளை எடுக்கலாம். அவளோட செலவுகள் நியாயமானவைன்னு அவள் நிரூபிக்கலாம். உனக்கு அதில் திருப்தி ஏற்பட்டு நெடு நாள் தப்பபிப்பிராயம் நீங்கலாம். அவள் சினேகிதிகள் விஷயங்களில் நீ இன்னும் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்வதாக தீர்மானிப்பதில் அவளுக்கொரு நெடு நாள் குறை தீரலாம்.”
”இப்படி ஒண்ணு இருக்கா?’ யோசித்தான்.
(’அமுதம்’ ஜனவரி 2015 இதழில் வெளியானது)
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.