நல்லதை நினைத்தே போராடுவோம் !
போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!
வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் மட்டும் போராட்டம் அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் . இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான ) உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடிகள் . சாலமன் மீன்கள் , கரடிகள் இருக்கும் இந்த நதிப்பகுதியைக் கடந்தால் தான் தங்களது இனப்பெருக்கத்தை நடத்த முடியும் . இல்லையென்றால் கரடிகளுக்கு உணவாக வேண்டியது தான் .
ஒரே நதிக்கரை இரண்டு இனங்களின் வாழ்க்கைப் போராட்டம் . கரடிகள் வருகின்றன மீன்களைப் பிடிக்கின்றன , பனிக்காலத்திற்கு வேண்டிய கொழுப்பைச் சேமிக்கின்றன . குட்டிகளுடன் வரும் பெண் கரடிகள் , குட்டிகளை ஒளித்து வைத்துவிட்டு ஆண் கரடிகள் இல்லாத இடத்தில் சாலமன் மீன்களை தனக்காகவும் , தன் குட்டிகளுக்காகவும் வேட்டையாடுகின்றன . ஆண் கரடி பார்த்து விட்டால் உறவுக்கு கட்டாயப் படுத்தும் . இடையுறாக இருக்கும் குட்டிகளையும் கொன்று விடும் . அதனால் பெண் கரடிகள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது . கரடிகளிடமிருந்து தப்பித்த சாலமன் மீன்கள் உகந்த இடத்திற்குச் சென்று தங்கள் இனப்பெருக்கதைச் செய்கின்றன . பெண் மீன், தன் வால் பகுதியால் பள்ளம் தோண்டி முட்டையிடுகிறது . ஆண் மீன், முட்டைகளின் மீது விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . உரிமையில்லாத மற்றொரு ஆண் மீனும் முட்டைகளின் மீது விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . கொஞ்ச காலம் அடை காக்கும் பெண் மீன் பிறகு இறந்து விடுகிறது . பிறகு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பிறந்து தங்கள் போராட்டத்தைத் தொடருகின்றன .
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் . நேர்மையாக இல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம் தான் . ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கான சூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல் இருப்பதற்க்கான சூழலும் யாருக்கும் அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ள போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அதற்கான பலன்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே அடைவர் . உண்மைக்காக , நீதிக்காக , நேர்மைக்காக , உரிமைக்காக,மண்ணுக்காக என்று நாம் போராட வேண்டியுள்ளது .
சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம் 16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட பெண்ணிடம் , “எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள் ? ” என்று கேட்டதற்கு ” எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம் . அவ்வப்போது நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன் ” என்று கூறினார் . இத்தனைக்கும் சரியான உணவு கிடையாது . 14 வயதிலேயே தனது பிரசவத்தை தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு . தன் குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் . மறதி தான் ,நம் வாழ்கையின் பெரும் துயர்களை மறக்கச் செய்கிறது .எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,மற்ற அனைத்து போராட்டங்களையும் வென்று விடுகிறது .
நல்லதை நினைத்தே போராடுவோம் !
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.